×

எந்த துறைகளும் செயல்படவில்லை ‘டம்மியான’ தாலுகா அலுவலக கட்டிடம் காளையார்கோவில் மக்கள் அதிருப்தி

காளையார்கோவில், நவ.5:  காளையார்கோவில் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கருவூலம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் போன்ற எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். காளையார்கோவில் 2015ம் ஆண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. புதிய கட்டிடமும் திறக்கப்பட்டது. ஸ்டேட் பேங்க் இருந்தும் இன்று வரை அரசு கணக்கில் கட்டவேண்டிய பணத்திற்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட கருவூலத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. காளையார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து மாவட்ட கருவூலம் செல்வதென்றால் கால விரயம் ஏற்படுகின்றது. மேலும்  தாலுகாவிற்கான சப்ஜெயில், நீதிமன்றம் இல்லை. இப்பகுதிகளில் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கையில் இருந்து தீயணைப்பு துறை வரவேண்டிய நிலை உள்ளது. அதற்குள் எரிந்து முடிந்து விடுகின்றது.

இது போன்று அனைத்து தேவைகளுக்கும் சிவகங்கை செல்ல வேண்டிய நிலை உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலகத்தில் தாலுகா சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலகங்களும் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் கருணாநிதி கூறுகையில், காளையார்கோவில் தாலுகா அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ஒரு சில வேலைகள் மட்டுமே காளையார்கோவில் தாலுகாவில் செய்ய முடிகின்றது. மற்ற அனைத்து தேவைகளுக்கும் சிவகங்கை செல்ல வேண்டிய நிலை உள்ளது. காளையார்கோவில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தாலுகாவிற்குட்பட்ட அனைத்து துறைகளையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : office building ,Kaliyariko ,
× RELATED நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல...