×

சிறு, குறு தொழில்நிறுவனங்கள் தரச்சான்று பெற 100% மானியம்

சிவகங்கை, நவ.5:  குறு, சிறு தொழில் நிறுவனங்கள் தரச்சான்று பெற கட்டணம் மானியமாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்நிறுவனங்கள் ஐஎஸ்ஓ உள்ளிட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதிகபட்சமாக ரூ.ஒரு லட்சம் வரை ஈடு செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெறுவதற்கு செலுத்தும் கட்டணத்தில் 100 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியமாக அளிக்கப்படும். இந்நிதியாண்டில்(2019-2020) திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு பெறும் ஐஎஸ்ஓ சான்றிதழ்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் பெறும் சான்றிதழ்கள், மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பெறும் சான்றிதழ்கள் மற்றும் இதர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக பெறும் பதிவு சான்றிதழ்கள் ஆகியவற்றை பெற செலுத்தும் ஆலோசனை மற்றும் பதிவு கட்டணத்தில் 100 விழுக்காடு மானியமாக அளிக்கப்படும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரி மற்றும்  04575 240257 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Micro Enterprises ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கால்...