×

உரம், பூச்சி மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை இணை இயக்குநர் எச்சரிக்கை

சிவகங்கை, நவ.5:  சிவகங்கை மாவட்டத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்தை கூடுதல் விலைக்கு விற்றால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: மாவட்டத்தில் நெல் நடவு மற்றும் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்து தனியார் விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. உரத்தினை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தவறினால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன் பிரிவு 3ஐ மீறிய செயலுக்கு அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955, பிரிவு7(1)ன்படி  வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோல் பூச்சி மருந்துகளை நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள விலைக்கு மேல் விற்பனை செய்தால் பூச்சி மருந்து சட்டம் 1968, பிரிவு-29ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தரமான உரம் மற்றும் பூச்சி மருந்துகளை மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பெற்று விற்பனை செய்ய வேண்டும். உரம் மற்றும் பூச்சி மருந்து இருப்பு விபரம், விலை விபரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் விளம்பர பலகை வைத்திட வேண்டும். வட்டார அளவில் பணியாற்றும் வேளாண் உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும். இது குறித்த புகார்களை விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர்களிடம் உடனுக்குடன் தெரிவிக்கவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்