பிறப்பு, இறப்பை 21 நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் கூடுதல் கட்டணம்

சிவகங்கை, நவ.5:  பிறப்பு, இறப்பு நிகழ்ந்தவுடன் 21 நாட்களுக்குள் பதிவு செய்யாவிடில் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பிறப்பு, இறப்பு நிகழ்ந்தவுடன் 21 நாட்களுக்குள் அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரியப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் தெரியப்படுத்த தவறும்பட்சத்தில் தாமத பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 2017 அக்டோபர் முதல் தாமத கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு மேல் தாமதமானால் தாமத பதிவு கட்டணம் ரூ.100. ஒரு மாதத்திற்கு மேல் தாமதமானால் ரூ.200, ஒரு ஆண்டிற்கு மேல் தாமதமானால் ரூ.500 தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.

குழந்தையின் பெயரை ஒரு ஆண்டிற்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ஆண்டிற்கு மேல் பெயரை பதிவு செய்ய தாமத கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற ரூ.200 செலுத்த வேண்டும். பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு ஒரு ஆண்டிற்கான தேடுதல் கட்டணம் ரூ.100. சரியான பிறந்த தேதி, இறந்த தேதி குறிப்பிட்டால் தேடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பதிவு இல்லா சான்றிதழுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். இணையதளம் மூலமாக இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறை 04.03.2019 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. 2018, 2019 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை crstn.org என்ற இணையதளம் மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை படிப்படியாக பழைய ஆண்டு பதிவுகளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>