×

அதிகாரிகளை கண்டித்து பேருந்து நிலைய வளாகத்தில் நாற்று நடும் போராட்டம்

சாயல்குடி, நவ.5: கடலாடி பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்து, உடைந்து விழுவதாலும், மழைக்கு ஓழுகுவதால் பயணிகள் உள்ளே செல்ல அஞ்சி, வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நெல் நாற்று நட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலாடி, தாலுகா, யூனியன் தலைமையிடமாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பொதுமக்களும், கடலாடி அரசு கல்லூரி மற்றும் அரசு மேல்நிலை பள்ளியில் படிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவர்களும் வந்து செல்கின்றனர். பேருந்தில் வந்து செல்வதற்கு, கடலாடி பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையம் சேதமடைந்து கிடப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாயல்குடி-முதுகுளத்தூர் சாலை அருகில் கடலாடி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலைய கட்டிடம் கடந்த 1969ல் கட்டப்பட்டதால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து கிடக்கிறது. அதிலிருந்து பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சுகள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் தலையை பதம்பார்த்து வந்தது.தற்போது பெய்த மழைக்கு ஒழுகி, பேருந்து நிலையம் உள்பகுதியில் தண்ணீர் தேங்கி, சேரும், சகதியுமாக கிடப்பதால் பொதுமக்கள் பேருந்து நிலைய பிளாட்பாரங்களில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. பயணிகள் அமரக் கூடிய இருக்கைகளும் உடைந்து கிடப்பதால், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு நுழைவதில்லை.இதனால் மழை மற்றும் வெயிலில் பேருந்திருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கடலாடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் பேருந்து நிலையம் மழைநீர் சூழப்பட்டு, சேரும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் பொறுமையை இழந்த பொதுமக்கள் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கருணாநிதி தலைமையில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து நேற்று நெல் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு மண்டல துணை தாசில்தார் இந்திரஞ்சித், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேருந்து நிலைய வளாகத்திற்குள் 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவற்றை காலி செய்ய வாடகைக்கு இருப்பவர்களுக்கு முறையான நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் கடையை காலி செய்தவுடன் பழைய கட்டிடங்களை கலெக்டரின் அனுமதி பெற்று இடிக்கப்பட்டு, கடைகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.இந்த பேருந்து நிலையத்திற்கு முன்பாக பழைய ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் சேதமடைந்து கிடக்கிறது. இதனையும், பேருந்து நிலைய பழைய கட்டிடங்களை அகற்றி விட்டு, புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை கட்ட அரசு முன்வரவேண்டும் என கடலாடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : protest ,bus stand ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீரை...