பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பயன்படாத சுகாதார நிலையம்

பரமக்குடி, நவ.5: பரமக்குடி ரயில் நிலையத்தில் சுகாதார அலுவலகம் செயல்படாமல் உள்ளதால், ரயில் பயனிகள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி ரயில் நிலையம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக முக்கியமான ரயில் நிலையமாக உள்ளது. பரமக்குடி ரயில் நிலையத்திற்கு முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, இளையான்குடி, பார்த்திபனூர், நயினார்கோவில், சத்திரக்குடி உள்ளிட்ட மிக முக்கியமான சிறு நகரங்களை இணைப்பதுடன், இந்த பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களையும் இணைத்து வருகிறது. இதனால் பரமக்குடி ரயில் நிலையத்திற்கு தினமும் 300 முதல் 500 பேர் வரை பயணிக்கவும், பயணிகளை வழியனுப்பவும் வந்து செல்கின்றனர். ரயிலில் வரும் பயணிகளும், பயணிகளை வழியனுப்ப வரும் மக்கள் எதிர்பாராத விதமாக தேவைப்படும் சிகிச்சைக்கு ரயில் நிலையத்தில் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினமும் பயணிகளுக்கு அடிப்படை மற்றும் அவசர சிகிச்சை கொடுப்பதற்கு செவிலியர் மற்றும் ஊழியர்கள் பயனியாற்ற வேண்டும்.

ஆனால், சுகாதார நிலையம் பயணிகளுக்கு எந்தவிதத்திலும் உதவியாக இருந்ததில்லை. சுகாதார நிலையம் எப்போதும் மூடியே உள்ளது. பயணிகளுக்கு பயணத்தின் போது தேவைப்படும் சிகிச்சை பெறமுடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் பரிதாபமாக பல உயிர் இழந்துள்ளனர். இதுகுறித்து பல முறை சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் சார்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ரயில்வே நிலையத்தை ஆய்வு செய்தபோது, சுகாதார நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சுழற்ச்சி முறையில் சுகாதார அலுவலர்களை நியமிக்க வேண்டும். ரயில் வரும் நேரங்களில் சுகாதார நிலையத்தில் மருத்துவர் தலைமையில் பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>