×

சாலை, மின்விளக்கு, கழிப்பறை வசதியில்லை எ.கிருஷ்ணாபுரத்துக்கு எப்ப கிடைக்கும் அடிப்படை வசதி

பேரையூர், நவ. 5: பேரையூர் அருகே உள்ள எ.கிருஷ்ணாபுரத்தில் சாலை, மயானச்சாலை, மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே, அதிகாரிபட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அதிகாரிபட்டி, வாகைக்குளம், ஆவல்சேரி, எ.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட நான்கு கிராமங்கள் உள்ளன. இதில், எ.கிருஷ்ணாபுரத்தில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மயானத்திற்கு சாலை வசதி இல்லை. மயானம் செல்லும் வழியில் ஓடை உள்ளதால், மழை காலங்களில் தண்ணீருக்குள் இறங்கி இறந்தவர்களை சுமந்து செல்கின்றனர். இந்த ஓடையில் பாலம் அமைக்கக்கோரி, கிராமமக்கள் யூனியன் ஆணையாளர், கலெக்டர், எம்எல்ஏ என அனைவருக்கும் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வசதியில்லை. இதற்காக பொருத்தப்பட்ட மின்மோட்டார் மாயமானது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மயானம் செல்லும் வழியில் குப்பைகளை கொட்டுவதால், இறந்தவர்களை உடலை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

ஊரில் குப்பை கொட்டும் வண்டியை மட்டும் நிறுத்தியுள்ளனர். ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் ஏட்டளவில் உள்ளது என குற்றம்சாட்டுகின்றனர். எ.கிருஷ்ணாபுரத்துக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்காவிடில், சேடபட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்வோம் எனத்தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டி: மயானத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதியில்லை. பிணத்தை சுமந்து செல்கிறோம். இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
ஜெயக்கொடி: பெண்களுக்காக கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வரவில்லை. கழிப்பறை புதர்மண்டிக் கிடக்கிறது. கிராமத்தில் சட்டவிரோத மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. இவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காளியப்பன்: இந்த கிராமத்தை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்டுகொள்வதில்லை. இது குறித்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஊர் அருகில் உள்ள ஊருணியில் முறையாக குடிமராமத்து பணி செய்யாமல், மதிப்பீட்டு தொகையை எடுத்துச் சென்றுவிட்டனர். கிராமத்துக்கு தேவையான சாலை, சுடுகாட்டு ஓடையில் பாலம், பெண்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்’என்று கூறினார்.

Tags : Road ,toilet facilities ,Krishnapuram ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...