திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் திறந்த நிலையில் அச்சுறுத்தும் ஆழ்துளை கிணறுகள் அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருப்பரங்குன்றம், நவ. 5: திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் திறந்த நிலையில், அச்சுறுத்தும் ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளன. இவைகளில் பல பயன்பாடின்றி உள்ளன. குறிப்பாக பள்ளி, கோயில்கள் என பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் இருக்கும் பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியான திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் முடி காணிக்கை செலுத்தும் இடம், திருநகர் மகாலட்சுமி காலனி, ஹார்விபட்டி ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறுகள் திறந்த நிலையில் உள்ளன. இதேபோல, கிராமப் பகுதியான விளாச்சேரி பள்ளிக்கு அருகில் உள்ள வடிவேல்கரை ரோட்டிலும், வேடர்புளியங்குளம், சூரக்குளம் ஆகிய இடங்களில் பள்ளி அருகிலும் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளன. இந்த ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் அரசு சார்பில் போடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை உயரதிகாரிகள் மூடுவதற்கு உத்தரவிட்டும், அலுவலர்கள் முறையாக மூடாமல், கற்கள் அல்லது சாக்கு துணிகளை வைத்து பெயரளவில் மூடியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் அரசு மற்றும் தனியார் சார்பில் போடப்பட்டு பயனற்று திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>