×

மயானத்தில் மண் அள்ள முயற்சி ஜேசிபியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

வேடசந்தூர், நவ. 5: வேடசந்தூர் அருகே அரியபித்தன்பட்டியில் மயானத்தில் மண் அள்ள வந்த ஜேசிபியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேடசந்தூர் ஒன்றியம், தட்டாரபட்டி ஊராட்சிக்குட்பட்டது அரியபித்தன்பட்டி. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வசித்து வருகின்றனர். இவ்வூருக்கு பொது மயானம் உள்ளது. அருகிலுள்ள திருமாணிக்கன்னூர், மாமரத்துப்பட்டி, தலையார்குளம், தட்டாரபட்டி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் குடனாற்றில் இணையும் இடத்தில் இந்த மயானம் உள்ளது. இதனால் இப்பகுதியில் மணல் அதிகளவு காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை ஜேசிபி இயந்திரம் கொண்டு மணல் எடுப்பதற்காக மயான பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதையறிந்த ஊர்மக்கள் உடனே அங்கு வந்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இதுபற்றி வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே மணல் எடுக்க வந்தவர்கள் தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு சென்று விட்டனர். பின்னர் ஊர்மக்கள், இதுகுறித்து வேடசந்தூர் காவல்நிலையத்திற்கு திரண்டு சென்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘அரியபித்தன்பட்டி மயானத்தில் மணல் எடுக்க முயற்சித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...