×

குயின்சோலை கிராமத்திற்கு அடிப்படை வசதிகோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி, நவ. 5:கோத்தகிரி  குயின்சோலை பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில்  கூறியிருப்பதாவது, கோத்தகிரி குயின் சோலை பகுதியில் 100க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த  8 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அதன் பின் சீரமைக்கப்படாத  நிலையில், சாலை மிகவும் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கின்றனர். மேலும், தேயிலையை ஏற்றிச்  செல்லும் மினி லாரிகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுளளது. உடல் நிலை  பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்ல முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.
 
மேலும், சாலையோரங்களில் உள்ள முட்புதர்கள்  வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள்  நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள சமுதாய  கூடத்திற்கு மின் இணைப்பு இல்லாததால் எந்த ஒரு சுக, துக்க நிகழ்ச்சிகளும்  நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், சமுதாய கூடத்தில் போதிய சமையல்  அறை இல்லாத நிலையில், சமைப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. சமுதாய  கூடத்தை சுற்றிலும் கான்கிரீட் போடப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில்  மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இந்த அடிப்படை வசதிகளை சீரமைத்து தரக் கோரி பல  முறை கோத்தகிரி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், எவ்வித  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் குயின்சோலை  கிராமத்திற்கு சாலை வசதி, சமுதாய கூடத்திற்கு மின் வசதி உட்பட அனைத்து  அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்  கூறியுள்ளனர்.

Tags : Collector ,village ,Queensola ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...