×

வீடு கட்ட தடை உத்தரவுக்கு எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 27ல் முற்றுகை போராட்டம்

ஊட்டி, நவ. 5:நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான பகுதிகளில் வீடு கட்ட தடை என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி வரும் 27ம் ேததி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊட்டியில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் குஞ்ஞி முகமது தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், பத்ரி, மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகளில் இனி வீடுகள் கட்ட கூடாது என மாவட்ட நிர்வாகத்தால் ஒரு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே தேயிலை தொழில் மந்தமான சூழலில் மாவட்டத்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. மலை காய்கறிகளுக்கு கட்டுபடியான விலையில்லை. சுற்றுலா தொழிலும் நெருக்கடியை நோக்கி செல்லும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவு மாவட்ட மக்களை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடும்.

எனவே மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வீடுகள் கட்ட தடை செய்யும் ஆணையை கண்டித்து வரும் 13ம் தேதி வருவாய் தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டமும், 27ம் தேதி ஊட்டியில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டமும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Siege protest ,
× RELATED டெல்லி வன்முறை சம்பவம் கண்டித்து...