×

தென்மேற்கு பருவமழையால் பாதிப்பு அரசு துறைகளுக்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு

ஊட்டி, நவ. 5:தென்மேற்கு பருவமழையின் போது பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மழை கொட்டியது. 7 நாட்கள் பெய்த மழையில் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டன. சாலைகள் இரண்டாக பிளந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. பல இடங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்தன. 300 கி.மீ., தூரத்திற்கு மேற்பட்ட சாலைகள் பழுதடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல ஏற்றவாறு உடனுக்குடன் தற்காலிகமாக சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.

ஆனால், பெரும்பாலான சாலைகள் முழுமையாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இச்சாலைகளை சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அதேபோல், முத்தோரை பாலாடா, அவலாஞ்சி, இத்தலார், ஏமரால்டு போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்த காய்கறிகள் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட சாலைகள், தடுப்பு அவர்கள் என பாதிப்புகள் ஏற்பட்டன. மழை பாதிப்புகள் குறித்து அந்தந்த துறைகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிப்புகள் குறித்த அறிக்கை தமிழக அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட அரசு துறைகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு முதற்கட்டமாக ரூ.80 கோடியும், தோட்டக்கலைத்துறைக்கு ரூ.66 லட்சமும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1.9 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தோட்டக்கலைத்துறையினருக்கு பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையும் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிதியும் வந்துள்ளது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘தென்மேற்கு பருவமழையின் போது, பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்படும்,’’ என்றார்.

Tags : South-West ,
× RELATED சராசரியை காட்டிலும் தென் மேற்கு பருவமழை அதிகமாக பெய்யும்