×

ராமையா பாலம் அருகே அணை நீர் வெளியேறியதால் அரிப்பு தடுப்புசுவர் சீரமைக்கும் பணி தீவிரம்

மஞ்சூர், நவ.5: அணையில் இருந்து வெளியேறிய நீரால் அரிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தடுப்பு சுவர் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் ஊட்டி பிரதான சாலையில் குந்தா ஆற்றின் குறுக்கே ராமையா பாலம் அமைந்துள்ளது. இதையொட்டி ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ள 70அடி உயரமுள்ள தடுப்புசுவர் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். சமீபத்தில் தொடர்ந்து பெய்த மழையால் இப்பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள், கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் குந்தா அணை நிரம்பியதால் பலமுறை அணை திறந்து விடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றத்தால் கரையோர தடுப்பு சுவரின் அடிப்பாகத்தில் அரிப்பு ஏற்பட்டது. சுமார் 20மீட்டர் தூரத்திற்கு தடுப்புசுவரில் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் தடுப்புசுவர் இடியும் அபாயம் ஏற்பட்டது. தடுப்புசுவர் இடியும் பட்சத்தில் சாலையின் பெரும்பகுதி பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை சார்பில் தடுப்புசுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதை தொடர்ந்து பணிகள் நேற்று துவங்கியது. சாலையில் இருந்து பி.வி.சி குழாய்கள் மூலம் சிமென்ட் கலவை கொண்டு செல்லப்பட்டு தடுப்புசுவரின் அடிபாகத்தில் ஏற்பட்ட அடிபாகத்தை அடைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags : dam water ,Ramaiya Bridge ,
× RELATED தேனி சாலையோரங்களில் வைகை அணை நீர் தேக்கம்