×

பயனற்று கிடக்கும் 77 ஆழ்குழாய் கிணறு மூடப்படுகிறது

ஊட்டி, நவ. 5:நீலகிரி மாவட்டத்தில் உள்ள 1770 ஆழ்குழாய் கிணறுகளில் மாவட்டம் முழுதும் 77 ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதை மூடும் பணிகளில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுப்பட்டி பகுதியில் குழந்தை விழுந்து இறந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்குழாய் கிணறுகள் குறித்தும், அதில் மூடப்படாத கிணறுகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்திலும் ஆழ்துளை கிணறுகள் குறித்தும், மூடப்படாமல் உள்ள கிணறுகள் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கணக்கெடுப்பு பணிகளை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டு வந்தனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் 1770 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 77 கிணறுகள் மூடப்படாமல் பயனற்று கிடப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஊட்டி மற்றும் குந்தா தலூகாவில் 40 கிணறுகளும், கூடலூரில் 20, கோத்தகிரியில் 7, குன்னூரில் 10 ஆகிய கிணறுகள் மூடப்படாமல் இருந்துள்ளது. இந்த கிணறுகள் அனைத்தும் தற்போது கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடும் பணிகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. மேலும், சில ஆழ்குழாய் கிணறுகள் மழை நீர் சேகரிப்பிற்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ‘‘திருச்சியில் குழந்தை இறந்த சம்பவத்தை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் கடந்த வாரம் முதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள 77 கிணறுகள் மூடப்படாமல் இருந்தது தெரியவந்தது. அதனை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கான்கிரீட் கலவைகள் கொண்டு அந்த கிணறுகள் மூடும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில கிணறுகள் மழை நீர் சேகரிப்பிற்காக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அபாயகரமாக உள்ள அனைத்து கிணறுகளும் ஓரிரு நாட்களில் மூடப்படும்,’’ என்றார்.

Tags : tube well ,
× RELATED காரைக்குடி அருகே செட்டிநாடு...