×

அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

கோவை, நவ. 5:  கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரகம் செயல் இழந்தவர்களுக்கு டயாலிசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த டயாலிசிஸ் பயனளிக்காத நபர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ரத்தம் சம்மந்தமான தொடர்புடையவர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரைக்கு அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய கடந்த 2017ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தகுதியானவர்களிடம் இருந்து சிறுநீரகம் பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களில் 22 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒருவர் 16 வயது இளம்பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் சிறுநீரக தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுநீரக தானம் பெற்றவர்கள் 5 முதல் 20 ஆண்டு காலம் ஆரோக்கியமாக வாழ முடியும். குடிப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. இதில், 80 சதவீதம் பேர் 25 வயது முதல் 40 வயது உள்ளவர்களாக இருக்கின்றனர். தற்போது, இளைஞர்களிடமும் சிறுநீரக பாதிப்பு அதிகாித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் பல லட்சம் செலவாகும். ஆனால், கோவை அரசு மருத்துவமனையில் சிறந்த மருத்துவ குழுவினரின் உதவியுடன் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வரை 23 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளோம்” என்றார்.

Tags : Government Hospital ,
× RELATED கலைஞர் 101வது பிறந்தநாளையொட்டி அரசு...