×

சம்பரவள்ளிப்புதூரில் விவசாயிகளுக்கு பயிர் நோய் கட்டுப்பாடு குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

கோவை, நவ. 5:  பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகளை பயன்படுத்துதல் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் சம்பரவள்ளிப்புதூரில் விவசாயிகளுக்கு நேற்று விளக்கம் அளித்தனர். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இறுதியாண்டு பயிலும் மாணவிகள் காரமடை வட்டாரத்தில் தங்கி களப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு செயல்முறை விளக்கங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், இரும்பொறை பஞ்சாயத்தை சேர்ந்த சம்பரவள்ளிப்புதூரில் பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு நேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், மாணவிகள் வாழையின் வாடல் நோயை கட்டுப்படுத்த கன்று நேர்த்தி செய்யும் முறையை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

இது குறித்து மாணவிகள் கூறியதாவது: பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்களில் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோய் ஏற்படுகிறது. வாழை, தென்னையில் வாடல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சைகளுக்கு எதிராக சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தலாம்.
இவை நோய் ஏற்படுத்தும்  உயிரிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி பயிர்களில் நோய் தாக்காமல் காக்கிறது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா அல்லது 10 கிராம் சூடோமோனாஸஸ் நன்றாக கலக்கி விதைக்க வேண்டும்.  வாழையில் கன்று நடவிற்கு முன்பாக 10 லிட்டர் நீரில் 10 கிராம் டிரைக்கோடெர்மா மற்றும் 10 கிராம் சூடோமோனாஸ் கலந்து கன்றை நன்றாக நனைத்து நட வேண்டும். இது வாழையின் வாடல் நோயை கட்டுப்படுத்துகிறது. ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா மற்றும் 1 கிலோ நூடோமோனாஸை 50 கிலோ நன்கு மடகிய எருவில் கலந்து வைத்து மறுநாள் மண்ணிலிட வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை இப்படி செய்ய வேண்டும். இவ்வாறு மாணவிகள் கூறினர்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்