×

குப்பை சுத்திகரிப்பு நிலையத்தால் சுகாதார சீர்கேடு அபாயம்

ஈரோடு, நவ. 5: ஈரோட்டில் வஉசி வீதியில் உள்ள மாநகராட்சி குப்பை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வீசும் கடும் துர்நாற்றத்தால் அப்பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு சூரம்பட்டி வ.உ.சி வீதியில் மாநகராட்சி குப்பை சுத்திகரிப்பு நிலையம் (உரக்கிடங்கு) அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இம்மையத்திற்கு கொண்டு வந்து தரம் பிரித்து உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்தியும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். பின்னர், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, பூங்கா மற்றும் சந்தை கட்டப்படுவதாக கூறினர். கட்டுமான பணிகள் முடிந்த பிறகு குப்பை சுத்திகரிப்பு ஆலையாக மாற்றிவிட்டனர். இந்த ஆலையை சுற்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆலையில் இருந்து தினமும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி வாந்தி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. மேலும், அங்கு ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் குப்பை சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...