×

பழுதான சாலையை சீரமைக்க கலெக்டர் உத்தரவு

ஈரோடு நவ.5: பர்கூர் மலைப்பகுதியில் பழுதடைந்த சர்வீஸ் சாலை சீரமைக்கப்படாததால் போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் கதிரவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட பர்கூர் தாமரைக்கரையில் இருந்து தாளகரை பிரிவு வரை 14 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. பாலங்கள் கட்டப்பட்டு வரும் இடங்களில் வாகனங்கள் சென்று வர சர்வீஸ் சாலை தற்காலிகமாக அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது. இந்த சாலை, சமீபத்தில் பெய்த மழையினால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து பர்கூர் மேற்கு மலைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டது.

இதனால் ஒன்னகரை, தம்புரெட்டி, ஒசூர், கோயில் நத்தம், செங்குளம், சின்ன செங்குளம், கொங்காடை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் போக்குவரத்து வசதி இன்றி அவதியுற்று வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்காமல் ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, கடந்த 2ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து பழுதான சாலையை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,`சாலை பழுதடைந்த காரணத்தால் போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக, நேரில் சென்று நான் ஆய்வு செய்ய உள்ளேன்’ என்றார்.

Tags : spam road ,
× RELATED பழுதான சாலையை சீரமைக்கக்கோரி கூடலூர்...