×

பவானி அருகே மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

பவானி, நவ.5: பவானி அருகே மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் வாய்க்கால் பாசனம் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கடைமடைப் பகுதிவரைக்கும் பாய்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றிலும், பவானி ஆற்றிலும் சென்று கலந்து வருகிறது. மேட்டூர் அணையின் மேற்குகரை வாய்க்கால் பவானி வட்டம், ஊராட்சிக்கோட்டை கிராமம், செங்காடு மற்றும் ராணா நகர் பகுதி வழியாகச் செல்கிறது. இந்த வாய்க்கால் விவசாயப்பண்ணை வழியாக வர்ணபுரம் மற்றும் பவானி - மேட்டூர் சாலை வழியாகச் சென்று காவிரி ஆற்றில் கலப்பது வழக்கம். இப்பகுதியில் பாசனப் பகுதிகள் குறைந்ததால் தண்ணீர் செல்லும் வாய்க்கால் மற்றும் அதன் கரைகள் சட்டவிரோதமாக முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலுக்கு அருகே வசிப்போர், சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியும், கழிவறைகள் கட்டியும், பாதை வசதி ஏற்படுத்திக் கொண்டும், வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளனர்.

படிப்படியாக செய்யப்பட்ட இந்த ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் பல்வேறு இடங்களில் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டும், கரைமடை பகுதியான பவானி பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை.  இதனால், பல்வேறு விவசாயக் கிணறுகள் தண்ணீரில்லாமல் உள்ளன. மேலும், விவசாயிகள் பலரும் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கிறது. எனவே, பொதுப்பணித் துறையினர், வாய்க்காலில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, ஏற்கெனவே இருந்த நிலையில் வாய்க்காலில் தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : west bank ,Mettur ,Bhavani ,dam ,
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்