×

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை

சத்தியமங்கலம், நவ.5: சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி மலைப்பகுதிக்கு செல்வதற்கும், கர்நாடக மாநிலத்தில் உள்ள இச்சாலை வழியாக பயணிக்க வேண்டும். தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தமிழக பகுதியில் உள்ளதால் சாலை நன்கு பராமரிக்கப்படுகிறது.

காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இருந்து கர்நாடக மாநிலம் சுவர்ணாவதி அணை வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதோடு தற்போது பெய்த மழையால், மிகவும் பழுதடைந்து வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளிடம் சாலையை சீரமைத்து தரக்கோரியும், கர்நாடக மாநில தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சாலையை சீரமைக்ககோரி கடந்த மாதம் வாகன ஓட்டிகள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. மோசமாக உள்ள சாலையில் பயணிக்கும் சரக்கு லாரிகள் பழுது ஏற்பட்டு நின்றுவிடுவதால் இருமாநில போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Tags : Pit National Highway ,
× RELATED மாலேகான் வெடிகுண்டு வழக்கு பாஜ எம்பி பிரக்யா ஆஜராகவில்லை