×

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஈரோடு, நவ. 5: ஈரோடு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று அகற்றினர். ஈரோடு மாநகர பகுதிகளில் பிரப்ரோடு, பெருந்துறைரோடு, ஈவிஎன்ரோடு, சத்திரோடு, மணிக்கூண்டு, கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது கடை முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். மேலும், பல வர்த்தக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் பிளக்ஸ் போர்டுகள், விளம்பர போர்டுகளை சாலையில் வைப்பதால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து சத்திரோடு வரையும், பிரப்ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் குழந்தைவேலு தலைமையில் 25க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு எடுக்கும் பணி மேற்கொண்டனர்.

ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று சாலையை ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த மேற்கூரைகளை அகற்றினர். மேலும், சாலையில் வைத்திருந்த விளம்பர போர்டுகளையும் எடுத்தனர். நேற்று ஈரோடு மாநகர பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து, பெருந்துறை ரோடு, ஈவிஎன் ரோடு, சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது. வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடை முன்பு மேற்கூரை அமைத்திருந்தாலோ அல்லது விளம்பர போர்டு வைத்திருந்தாலோ உடனடியாக அதை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றப்படும். சாலையை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : roadside occupancy stores ,
× RELATED வில்லியனூர் அருகே மருத்துவ கழிவுகளை...