×

மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத 2,844 போர்வெல் மூடப்பட்டது

ஈரோடு, நவ.5: ஈரோடு மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் பயன்பாடு இல்லாமல் இருந்த 2 ஆயிரத்து 844 போர்வெல்கள் மூடப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுப்பட்டியில் பயன்பாடற்ற போர்வெல் குழியில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு  தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற போர்வெல்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில், ஈரோடு மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், பொது இடங்கள் மற்றும் காலியிடங்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் போர்வெல்கள் விவசாய நிலங்களில் உள்ள திறந்த வெளி கிணறுகள், தூர்ந்து போன கிணறுகளை மூடும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து ஆய்வு செய்து பயன்பாடு இல்லாத திறந்து கிடக்கும் போர்வெல்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் உள்ளாட்சி மற்றும் வருவாய்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 844 போர்வெல்களுக்கு பிளாஸ்டிக் மூடி போட்டு மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: பயனற்ற போர்வெல்களை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அது தொடர்பான ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலிமனைகள் மற்றும் விவசாய நிலங்கள், அரசு இடங்களில் உள்ள பயனில்லாத போர்வெல் குழிகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட ஊரகப் பகுதிகளில் 38 ஆயிரத்து 377 போர்வெல்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 35 ஆயிரத்து 322 போர்வெல்கள் பயன்பாட்டில் உள்ளன. 3 ஆயிரத்து 55 போர்வெல் உபயோகத்தில் இல்லை.
இதில், அரசின் உத்தரவுப்படி பயன்பாடு இல்லாத 2 ஆயிரத்து 844 போர்வெல்கள் மூடப்பட்டன. வறண்டு காணப்பட்ட 277 போர்வெல்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,`மாநகராட்சியில் 910 போர்வெல்லில் மோட்டார் இணைப்பும், 820 அடிபம்புகளும் உள்ளன.

இவை அனைத்தும் பாதுகாப்பான முறையில் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட தனியார் காலிமனைகள், விவசாய நிலங்களில் பயனற்ற போர்வெல் மூடப்படாமல் இருப்பது கண்டறியும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். திண்டல், விவிசிஆர்.,நகர் உள்ளிட்ட இடங்களில் பயன்படாமல் இருந்த 6 போர்வெல்கள் கான்கிரீட் ரிங் மூலம் மூடப்பட்டது. கடந்த ஓராண்டில் மாநகராட்சியில் எவ்வளவு போர்வெல் போடப்பட்டது. அதில் பயனற்றது எத்தனை என்பது குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பயனற்ற போர்வெல்கள் அனைத்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : district ,Borewell ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்