×

பட்டா மாற்றம் செய்யாமல் அலைக்கழிப்பு குடும்பத்தினருடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, நவ.5: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பட்டா மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக தெரிவித்து, குடும்பத்தினருடன் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், பட்டா மாற்றம், உதவித்தொகை, கடனுதவி, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 540 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று, அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் ேகாரிக்கை மனுக்களை பெற்றார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

இந்நிலையில், தண்டராம்பட்டு தாலுகா, போந்தை கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ்(70) என்பவர், மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். நீண்ட நேரம் அலுவலக நுழைவு வாயில் அருகே காத்திருந்த அவர் திடீரென பிளாஸ்டிக் பாட்டிலில் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து, தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதையடுத்து, முதியவர் சின்னராஜிடம் நடத்திய விசாரணையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கிய விவசாய நிலத்திற்கான பட்டாவை தன்னுடைய பெயருக்கு மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால், அதன்மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பம்பு செட் மின் இணைப்பிலும் பெயர் மாற்றம் செய்யாமல், அதிகாரிகள் அலைக்கழித்ததால் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். பின்னர், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர். அதேபோல், மேல்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன்(63) என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் அபகரிப்பதாக தெரிவித்து, கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் மனு அளிக்க காத்திருந்தபோது மண்ணெண்ெணய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரையும், போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர், எச்சரித்து அனுப்பினர்.அடுத்தடுத்து 2 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அங்கு ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடுமையான சோதனைக்கு பிறகு, அலுவலகத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags : Thiruvannamalai Grievance Meeting ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...