×

கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது குறைதீர்வு கூட்டத்தில் இந்து முன்னணியினர் மனு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

வேலூர், நவ.5: கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என கலெக்டர் அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். ஏராளமான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு மனு அளித்தனர்.இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், பொருளாளர் பாஸ்கர் தலைமையில் இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கோயில் நிலங்களை மீட்கவேண்டும் என கோஷமிட்டனர்.பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் அளித்த மனுவில், ‘நமது மாவட்டத்தில நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளது. கோயிலை பராமரித்து பூஜை செய்வதற்காக முன்னோர்களால் சுவாமி பெயரில் நிலங்கள் வழங்கப்பட்டது. இவை கோயிலுக்குதான் சொந்தம். அரசுக்கு சொந்தமானதல்ல. சமீபத்தில் தமிழக அரசு, கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கிற்காக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்திலும் இதனை கூறியுள்ளது. இது பக்தர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து, கோர்ட்டில் கொடுத்த பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெறவேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த சுடுகாட்டை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். இதனை தட்டிக்கேட்பவர்களுக்கு மிரட்டல் வருகிறது. இதுகுறித்து மேல்பட்டி காவல்நிலையம், தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுடுகாடு நிலத்தை மீட்டுத்தரவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.கூட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 திருநங்கைகளுக்கு தலா ₹2.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 4 ேபருக்கு, ₹14 ஆயிரம் மதிப்புள்ள உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் சமூக நலத்துறை சார்பில் நலிவடைந்தோர் குடும்பத்தினருக்காக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

Tags : House of Representatives ,
× RELATED விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன்...