×

பள்ளிப்பட்டு அருகே மலைகளில் இருந்து வரும் மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும்

பள்ளிப்பட்டு, நவ. 5: பள்ளிப்பட்டு அருகே மலைகளில் வெளியேறும் ஊற்று நீர் மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கொல்லாலகுப்பம் சுற்று வட்டார கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு அருகே உள்ளது கொல்லாலகுப்பம். இக்கிராமத்தை சுற்றி உள்ள கேசவாரஜகுப்பம், சின்ன முடிப்பள்ளி, புண்ணியம், டி.டி.கண்டிகை உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட கிராமமக்களின்  வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகின்றது.  இங்குள்ள மூன்றுகுப்பை என்று அழைக்கப்படும் மலைகளிலிருந்து மழை காலங்களில் மழை நீர் ஊற்று பெருக்கு ஏற்பட்டு ஓடை,  மலைகளுக்கு ஒட்டி கால்வாயில் சென்று நேராக 5 கி.மீ தூரத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலந்து விடுகின்றது. இந்த நீரை சேமிக்கும் வகையில் மூன்றுகுப்பையில் உள்ள இரு மலைகளுக்கு இடையில்  சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்  உள்ள பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது  கொல்லாலகுப்பம் கிராமத்தைச் சுற்றி உள்ள கிராமமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும்   எந்த அரசும் நடவடிக்கை எடுக்காத நிலையில்  கிராமத்திற்கு அருகில்  மலைகளிலிருந்து ஓடைநீர் கால்வாயில் பெருக்கெடுத்து  வீணாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து விடுகிறது.

இதனால், நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில்,  பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள், தோட்டங்கள், காய்ந்து காணப்படுகின்றது. ஒரு பக்கம் மழை ஊற்று  நீர் கால்வாயில்  பெருக்கெடுத்தாலும், மறு பக்கம்  குடிநீர் தட்டுப்பாடுடன் கிராம வாசிகள் அவதிப்படுகின்றனர். பாசனத்திற்கு நீரின்றி பலர் கூலி வேலைகள் தேடி நகர்புறங்களுக்கு சென்று விட்டதாக கிராம வாசிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, இரு மலைகளுக்கு இடையில்   தடுப்பணை அமைத்தால்,  மலைகளிலிருந்து வரும் ஓடைநீர் சேமித்து நீராதாரங்கள் அதிகரித்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனத்திற்கு பயன்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் நீங்கும் என்று கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : school ,hills ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி