×

ஆள்காட்டு வெளியில் இயங்கிய துணை சுகாதார நிலையத்தை காணவில்லை

திருவாரூர், நவ.5: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் செறுபனையூர் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கணபதி என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் முத்துப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊராட்சி ஆள்காட்டி வெளிப்பகுதி கிராமத்தில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக அங்கு இயங்கவில்லை என்றும் இது குறித்து சங்கேந்தி எடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது அங்குள்ள மருத்துவர் மூலம் சம்பந்தப்பட்ட துணை சுகாதார நிலையமானது ஆள்காட்டி இ சேவை மைய பகுதியில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே கடிதத்தில் மேற்படி துணை சுகாதார நிலையத்தை சேர்ந்த சுகாதார செவிலியர் ஒருவர் பின்னத்தூர் கிராமம் நத்தம் பகுதியில் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர் மற்றும் செவிலியரின் தகவல்கள் மாறுபட்டு இருப்பதால் எது உண்மை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக ஆள்காட்டி வெளி பகுதிக்கு பல தடவை சென்றும் அங்கு துணை சுகாதார நிலையம் இயங்கவில்லை. மாறாக நத்தம் பகுதியில் சுகாதார செவிலியர் வசித்து வருவதால் தனது வீட்டிலேயே துணை சுகாதார நிலையத்தை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது .எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் கணபதி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...