×

செல்பி மோகம் உயிரை பறித்தது கிணற்றில் இறங்கி படம் எடுத்த மணமகள் சாவு

பட்டாபிராம், நவ. 5;ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகர், முதல் தெருவை சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் மெர்ஸி (23). பட்டதாரி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது உறவினர் அப்பு (24). இவர், பட்டாபிராம் நவஜீவன் நகர், முதல் தெருவில் வசிக்கிறார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் கடந்த செப்டம்பர் மாதம்  திருமண நிச்சயதார்த்தம் நடத்தினர். இவர்கள் திருமணம் வரும் ஜனவரி மாதம் நடக்க இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு அப்பு, மெர்ஸியுடன் ஆவடி அருகே மிட்டினமல்லி, கண்டிகை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வந்தார். பின்னர் இருவரும் கிணற்றுக்குள் இறங்கி செல்பி எடுக்க முடிவு செய்தனர். கிணற்று படிக்கட்டு வழியாக உள்ளே இறங்கி படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது மெர்ஸி, எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பு, மெர்ஸியை  காப்பாற்ற உள்ளே குதித்தார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

இதனையடுத்து அப்பு, கிணற்றின் சுவற்றை பிடித்தபடி சத்தம் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்த  விவசாயி சடகோபன் ஓடிவந்தார். ஒரு கயிற்றை கிணற்றுக்குள் போட்டு அப்புவை காப்பாற்றினார். கயிற்றை பிடித்தபடி படிக்கட்டு வழியாக வெளியில் வந்த அப்பு, மெர்ஸி கிணற்று நீரில் மூழ்கியது குறித்து சடகோபனிடம் கூறியுள்ளார். அவர் அந்த பகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள்  கிணற்றுக்குள் தேடி மெர்ஸியின் உடலை மீட்டனர்.
தகவலறிந்த முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மெர்ஸியின் உடலை கைப்பற்றினர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூச்சுத்திணறலுடன் இருந்த அப்புவை ஆவடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பு, சிகிச்சை பெற்று வருகிறார்.  செல்பி மோகத்தால் கிணற்றில் இறங்கி படம் எடுத்த மணமகள் பலியான சம்பவம் பட்டாபிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  



Tags : bride ,well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை