×

ஆவடி புதிய ராணுவ சாலையில் சீரமைக்கப்படாத கழிவுநீர் கால்வாயால் சுகாதார சீர்கேடு

ஆவடி, நவ.5: ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் உடைந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.     ஆவடி புதிய ராணுவ சாலையில் அரசு பொது மருத்துவமனை, தனியார் மருத்துவ மனைகள், மாநகராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், ஆவடி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இதோடு மட்டுமில்லாமல், இச்சாலையில் மசூதி, சர்ச், கோயில்களும் உள்ளன. இச்சாலை வழியாக தான் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காமராஜர் நகர், திருமலைராஜபுரம், நேரு பஜார், பருத்திபட்டு,  பூந்தமல்லி, திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரவேண்டும்.
இச்சாலை ஆவடி மாநகருக்கு மையப்பகுதியில் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் இச்சாலை பயன்படுத்தித்தான் தங்களது பணிகளுக்கு சென்று வருகிறார்கள்.  இச்சாலையில் ஒரு புறத்தில் உள்ள கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலேயே உடைந்து கிடக்கின்றன. இதனால், வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள கழிவு நீர் முறையாக செல்ல முடியவில்லை.

இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.      இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி புதிய ராணுவ சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை வழியாகத்தான் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான வாகனங்களும் செல்கின்றன. மேலும், சாலையை பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது பணிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவமனை, மாநகராட்சி, காவல்துறை, சார் பதிவாளர் உள்ளிட்ட துறைகளை சார்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் இச்சாலை வழியாக  செல்கின்றனர்.    இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த புதிய ராணுவ சாலையில் கழிவுநீர் கால்வாய்கள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமலேயே உள்ளது. இந்த கால்வாய் பல இடங்களில் சாலை ஓரத்தில் உடைந்து கிடக்கின்றன. இதனால், பாதசாரிகள் சாலை ஓரமாக நடமாட முடியவில்லை. இதனையும் மீறி நடந்தால் அவர்கள் உடைந்த கால்வாய்க்குள் விழுந்து விபத்தில் சிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும், கால்வாய் தூர்வாரப்படாமல் கிடப்பதால், அதில் கழிவுநீர் செல்ல முடியவில்லை. இதனால் கால்வாயில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள் மூக்கை பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் உடைந்து கிடக்கும் கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை கழிவுகளும் கிடைக்கின்றன. இதில் இருந்து உற்பத்தியாகும்  கொசுக்கள் கடிப்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகின்றன.
 இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை ஆவடி மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இனி மேலாவது ஆவடி மாநகராட்சி நிர்வாகம் கவனித்து புதிய ராணுவ சாலையில் உடைந்து கிடக்கும் கால்வாயை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : sewer canal ,Avadi New Army Road ,
× RELATED ராயனூர் கடைவீதி சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய கோரிக்கை