×

உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி, நவ. 5: தூத்துக்குடி  மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம்  கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு 15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்தாண்டு படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் சேதமடைந்து  விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த வருடம் படைப்புழுக்களின்  தாக்குதலை கட்டுப்படுத்திட வேளாண்மைத்துறையினர் மூலமாக உரிய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. படைப்புழுக்களை அழித்திட மாஸ் ஸ்பிரே என்ற நவீன  தொழில்நுட்ப முறையில் மருந்துகளை தெளித்திடும் பணிகள் வேளாண்மைத்துறை  மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த வருடம்  படைப்புழுக்களின் தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்படும்.தூத்துக்குடியில்  போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் பைகள்,  சூட்கேஸ் போன்றவை ஏதேனும் கேட்பாரற்று கிடந்தால் பொதுமக்கள் அதுகுறித்து  காவல்துறையினருக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும். உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உரிமத்தை முறைப்படி  புதுப்பித்திட வேண்டும். உரிமத்தை புதுப்பிக்காமல் துப்பாக்கியை  பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து  பெய்த கனமழையால் மாவட்டத்தில் 80 சதவீத குளங்கள் நிரம்பியுள்ளது.  நிரம்பியுள்ள குளங்களில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.  கோரம்பள்ளம் குளம் 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளது.தூத்துக்குடி  மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்கிட கூட்டுறவுத்துறை மூலமாக துரித  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் 1900 மெட்ரிக்  டன் உரம் நமது மாவட்டத்திற்கு வரவுள்ளது. இதுபோக மதுரையில் இருந்து 1000ம்  டன் உரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக  விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.தொடர்  மழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார்  மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தற்காலிக பேருந்து  நிலையத்திலும் தேங்கியுள்ள மழைநீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது,  என்றார்.

Tags : Sandeep Nanduri ,
× RELATED கலெக்டர் தகவல் வலங்கைமான் அருகே விஷமருந்தி வாலிபர் தற்கொலை