×

அடிக்கடி விபத்துகள் நிகழும் குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைக்கப்படுமா?

உடன்குடி, நவ. 5: குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்து நிகழும் பகுதியில் தடுப்புகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநகரம் முதல் கிராமப் பகுதிகள் சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடலோரப்பகுதிகளை இணைத்து அமைக்கப்பட்டிருந்த கிழக்கு கடற்கரை சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன் அகலப்படுத்தப்பட்டது. சாலை விரிவுப்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த வழித்தடத்தில் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதிவேகமாக செல்லத் துவங்கியுள்ளன. மேலும் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி, கோயில் நகரமான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவோர், கிழக்கு கடற்கரை சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். தற்போது திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், மணப்பாடு வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் செல்வதற்கு அண்ணாசிலை சாலை வழியாக செல்ல சாலை பிரிகிறது.

இந்த சாலை பிரியும் பகுதியில் எவ்வித தடுப்புகளோ, குறியீடுகளோ குறிக்கப்படாமல் உள்ளது. இதனால் அண்ணாசிலை சாலையில் இருந்து வந்தாலும் சரி, சென்றாலும் சரி மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த சாலை வழியேத்தான் தினமும் பல்வேறு துறை அதிகாரிகளும் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலைகள் பிரியும் பகுதியில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : accidents ,road ,Kulasekaranapattinam East coast ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்