×

வீடுகளை சூழ்ந்த மழைநீர் அகற்றப்படுமா?

தூத்துக்குடி, நவ. 5: தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடந்த வாரம் இரு நாட்கள் இடைவிடாது கொட்டிய கனமழையால் தூத்துக்குடி மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை தாமதமின்றி அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தூத்துக்குடி தபால்தந்தி காலனி, கிருஷ்ணராஜபுரம் 2வது கிழக்கு தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பாசிபடர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாகவும் மாறி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மழை நின்று 3 நாட்களாகிவிட்ட நிலையிலும் தண்ணீர் வெளியேற்றப்படாததால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் உள்ளது.

எனவே போர்க்கால அடிப்படையில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதுகுறித்து தபால்தந்தி காலனி மக்கள் கூறுகையில், 9வது தெரு மேற்கு பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். எங்கள் பகுதிக்கு தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும், என்றனர். இதேபோல் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி மதிப்பில் பூங்காக்கள் அமைப்பது, அழகுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தும் அதிகாரிகள், இதுபோன்ற தாழ்வான பகுதிகளில் சாலை அமைத்தல், கழிவுநீரோடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...