×

வெளிநாட்டு விளைபொருட்கள் இறக்குமதிக்கு எதிர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, நவ. 5: வெளிநாட்டு வேளாண் விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தி கோவில்பட்டி, தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிய பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளில் இருந்து வேளாண் விளை பொருட்களை வரியின்றி இந்தியாவிற்குள் இயக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் திட்டமாகும். எனவே இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட கூடாது. விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி யூரியா டிஏபி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார் மாநில பொருளாளர் பெருமாள் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், முத்துமாரியப்பன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்தர், சங்கர், மாரியப்பன், பாலமுருகன், சங்கிலிபாண்டி, சீனிப்பாண்டி, துரைராஜ், சின்னச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு செயலாளர் நல்லையா தலைமையில் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உலக வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது முதல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிய நாடுகள் மற்றும் உலக வர்த்தக ஒப்பந்த உறுப்பு நாடுகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள விரிவடைந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திட முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஏற்பதன் மூலம் வேளாண் பொருட்கள், பால் பொருட்கள், உணவு தானியங்கள், உரங்கள், ரசாயனங்கள் தாராளமாக இறக்குமதி செய்யப்படும். இதன் விளைவால் இதனை சார்ந்துள்ள விவசாயிகள், சிறு வணிகர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவர். மேலும் மாநில சுயாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே விரிவடைந்த பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்ததத்தில் கையெழுத்திடாமல் இந்திய அரசு விலகிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வைகுண்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு  விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்  ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய செயலாளர் மணி மாவட்ட  துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம்.  சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : protest ,Union ,
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...