×

புனரமைப்பு பணிகளுக்கு பின் முதல்முறையாக 40 அடியை எட்டும் பேச்சிப்பாறை அணை

நாகர்கோவில், நவ.5: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டுகிறது.குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் புயல் சின்னங்கள் காரணமாக மழை மேலும் தீவிரம் அடைந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 39.80 அடியாக இருந்தது. அணைக்கு 526 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்படுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து காணப்படுவதால் அணை நீர்மட்டம் 40 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பேச்சிப்பாறை அணை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட வில்லை. இந்த ஆண்டும் கன்னிப்பூ சாகுபடி வேளையில் அணை நீர்மட்டம் 20 அடியுடன் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் முதல் முறையாக அணை நீர்மட்டம் மீண்டும் உச்சநீர்மட்ட அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். அணையில் 42 அடி நீர்மட்டம் எட்டும்போது அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம் ஆகும். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டி வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. அணைக்கு 688 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1ல் 16.10 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 136 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 136 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-2ல் 16.20 அடியாக நீர்மட்டம் உள்ளது.பொய்கையில் 32.20 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 43 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 43 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கடல் அணை நீர்மட்டம் 25 அடியாக காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை வரை குருந்தன்கோடு பகுதியில் 12 மி.மீ மழை பெய்திருந்தது. கன்னிமார், மயிலாடி, நாகர்கோவில், பாலமோர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை காணப்பட்டது.


Tags : phase ,barrage dam ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...