×

பெரம்பூர் குளக்கரை சாலையில் நோய் பரப்பும் மையமான விளையாட்டு திடல் : அதிகாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்படுமா?

பெரம்பூர்: பெரம்பூர் குளக்கரை சாலையில் மாநகராட்சி விளையாட்டு திடல் குப்பை கிடங்காக காட்சியளிப்பதால், நோய் பரவும் இடமாக மாறியுள்ளது. பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா அருகில் பெரம்பூர் குளக்கரை சாலையில்  மாநகராட்சி விளையாட்டு திடல் அமைந்துள்ளது. இதனை சுற்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் இந்த விளையாட்டு திடலில் சிறுவர்கள், மாணவர்கள் விளையாடி மகிழ்ந்து  வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு  இந்த விளையாட்டு திடலில் சிலர் இரவு நேரங்களில் கட்டிட கழிவுகளை கொட்டி வந்தனர். நாளடைவில்  மாநகராட்சி அதிகாரிகளின் ஆசியோடு சில தனியார் ஒப்பந்ததாரர்கள் இந்த திடலில் தங்களது கட்டுமான பொருட்களை வைக்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.

அதுமட்டுமின்றி, வடமாநில தொழிலாளர்கள் சிலர் இங்கு டென்ட் அமைத்து தங்கி வருகின்றனர். தற்போது, சிலர் கட்டிட இடிபாடுகளை கொண்டு வந்து, இந்த மைதானத்தில் குவித்து, அதில் உள்ள இரும்பு, மரப்பலகை உள்ளிட்ட பொருட்களை பிரித்து எடுக்கின்றனர்.  மேலும், பழுதடைந்த குப்பை தொட்டிகளையும்,  குப்பை கழிவுகளையும் இந்த திடலில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உரம் தயாரிக்கும்  பணி இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணியும் சரிவர நடைபெறாமல் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இந்த மைதானத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு யாரும் வருவதில்லை. இதன் வெளிப்பக்கத்தில் மாநகராட்சி கழிப்பிடம் உள்ளது. இதன் கழிவுநீர் பைப்லைன் உடைந்து கழிவுநீர் மைதானத்தில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.  

இதன் காரணமாக அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வசிப்பிடத்தை சுகாதாரமாக வைத்திருக்க தவறினால், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், அவர்களது பராமரிப்பில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் மாநகராட்சி கழிப்பிடம் போன்றவற்றை சுகாதாரமற்ற முறையில் வைத்துள்ளனர். இதற்கு யார் அபராதம் என விதிப்பது அப்பகுதி வாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விளையாட்டு திடலில் உள்ள கட்டிட மற்றும் குப்பை குவியலை அகற்றி, மீண்டும் விளையாட்டு மைதானமாக மாற்ற வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Centers ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...