×

எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலை பழுதை சீரமைத்த போக்குவரத்து போலீசார்

திருவொற்றியூர்:  எர்ணாவூர் மேம்பாலம் அருகே பழுதடைந்த சாலையை  போக்குவரத்து போலீசார்  கான்கிரீட் கலவை போட்டு சீரமைத்தனர். போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருவொற்றியூர் அருகே  எர்ணாவூர் மேம்பாலம் வழியாக மாநகர பேருந்து, கன்டெய்னர் லாரிகள், கார், பைக் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், எர்ணாவூர்  மேம்பாலம் அருகே  இந்த சாலை  பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் சிக்கி பழுதாகி நின்று விடுவதால் அடிக்கடி இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் உள்ள இந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி வந்தனர்.

எனவே, இந்த பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் விபத்துகள் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம் செய்ய திட்டமிட்டனர். இதுபற்றி அறிந்த எர்ணாவூர்  போக்குவரத்து காவலர்கள்  வெங்கடேசன், செந்தில்குமார் ஆகியோர் நேற்று காலை எர்ணாவூர் மேம்பாலம்  அருகே மற்றும் ராமகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதியில் பழுதடைந்த சாலையில் காங்கிரீட் கலவையை போட்டு சீரமைத்தனர். சீருடை அணிந்து கொண்டு காங்கிரீட் கலவையை போக்குவரத்து போலீசாரே போட்டது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Traffic policemen ,bridge ,Ernakavur ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...