×

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள் : பெற்றோர் குற்றச்சாட்டு

தாம்பரம்: அரசு பள்ளி மாணவர்களை வேலை செய்ய வைத்து துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் பல்லாவரம் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அஸ்தினாபுரம் மற்றும் அதன் சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கும் பள்ளி மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இப்பள்ளியில் உள்ள ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவியரை அவர்களது சொந்த வேலைகளை செய்யச் சொல்லி துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவ மாணவியரின் பெற்றோர் கூறுகையில், ‘‘பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பள்ளி நேரங்களில் அருகிலுள்ள கடைகளுக்கு அனுப்புவது, தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கச் சொல்வது, வகுப்பறைகளை சுத்தம் செய்யச் சொல்வது, ஆசிரியர்கள் முகம், கால், மற்றும் கை கழுவுவதற்கு அருகில் உள்ள தெருவில் உள்ள அடி பம்பில் தண்ணீர் அடிக்க சொல்வது உள்ளிட்ட வேலைகளை செய்யச் சொல்லி தினமும் துன்புறுத்தி வருகின்றனர். இதனால் மாணவ மாணவியர் பள்ளி நேரங்களில் பாடம் கற்றுக்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் சொல்லும் பணிகளை மட்டும் செய்யும் நிலை உள்ளது. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2.10 மணி அளவில் மாணவ மாணவியரில் பெற்றோர் பள்ளிக்கு சென்றபோது மைதிலி என்ற ஆசிரியை பள்ளி வளாகத்தில் இருந்து மாணவி ஒருவரை வெளியே அழைத்து வந்து தெருவில் உள்ள அடி பம்பில் மாணவியை தண்ணீர் அடித்துக்கொண்டு இருந்தார்.
மேலும், அந்த நீரில் ஆசிரியை முகம், கை, கால் கழுவிக்கொண்டு உள்ளே சென்றார். இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இது குறித்து உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.  

Tags : Teachers ,elementary school ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...