×

ஆவடி பருத்திப்பட்டு ஏரி நிரம்பியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது : பொதுமக்கள் கடும் அவதி

ஆவடி: ஆவடியிலுள்ள பருத்திப்பட்டு ஏரி நிறைந்து வெளியேறும் உபரிநீர் பூந்தமல்லி நெடுஞ்சாலை,  வசந்தம் நகர், விவேகானந்த நகர் பகுதி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆவடியில் 80 ஏக்கர் பரப்பளவில் பருத்திப்பட்டு ஏரி உள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் இந்த ஏரி நேற்று முன்தினம் இரவு முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து உபரிநீர் மதகு வழியாக வெளியேறி வருகிறது. இந்த உபரிநீர் ஆவடி- பூந்தமல்லி சாலை, வசந்தம் நகர், விவேகானந்தா நகர், தனியார் கல்லூரி  வழியாக அயப்பாக்கம் ஏரியை சென்றடைகிறது.  இந்த பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், சில இடங்களில் உடைந்து கிடப்பதாலும் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களது உடமைகளை இழந்து பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அவர்கள் வணிக நிறுவனங்களை இழுத்து பூட்டிவிட்டு சென்றனர். இதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதேபோல் வசந்தம் நகர், விவேகானந்தா நகர் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்த மழைநீர் நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் உள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். மேலும், மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். மழை காலத்திற்கு முன்பே ஏரி  உபரிநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக சீரமைத்து இருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததால், தற்போது கால்வாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை, வசந்தம் நகர், விவேகானந்தா நகர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : houses ,Awadhi Cotton Lake ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்