காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இடங்களில் வாடகை பாக்கி வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியீடு

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இடங்களை பயன்படுத்தி வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் கோயில் வளாகத்தில் 3ம் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 50 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 4000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், மனைகள் என ஏராளமான சொத்துக்களும் உள்ளன. இந்த சொத்துக்களை குறிப்பிட்ட சிலர் குறைந்த வாடகையில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அந்த குறைந்த வாடகையையும் முறையாக செலுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பெரும்பாலான இடங்களில் கோயில் இடங்கள் தொடர்பான வழக்குகளாலும், குத்தகை மற்றும் வாடகையை வசூலிக்க முடியாமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதை தொடர்ந்து வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியலை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும் என செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை தலைமை உத்தரவிட்டது.

அதன்பேரில், காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த இடங்கள் குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில் செய்வோருக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் குறைந்த வாடகையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் வசிக்கும், தொழில் செய்யும் குத்தகைதாரர்கள் பல ஆண்டுகளாக முறையாக பணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வாடகை பாக்கி உள்ளவர்களின் பெயர் பட்டியல் கோயில் வளாகத்தில் 3ம் பிரகாரத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி இந்து சமய அறநிலைத்துறையினர்  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்  திருக்கோயில் நுழைவாயிலில் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், அதன் பரப்பு, குத்தகைதாரர் செலுத்த வேண்டிய பாக்கி தொகை உள்ளிட்ட விவரங்களை குறிபிட்டு பட்டியலை வைத்துள்ளனர்.

இதில் குத்தகை பாக்கியாக சுமார் ₹50 கோடி கோயிலுக்கு வர வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை கண்ட பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சபேஸ்வரர் கோயிலில் இதேபோன்று குத்தகை பாக்கி வைத்திருப்போரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது ஏகாம்பரநாதர் கோயிலில் வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்களும் உள்ளன. இந்த சொத்துக்களை குறிப்பிட்ட ஒரு சிலரே பயன்படுத்தி வருவதாகவும், அதனை மீட்டு பொது ஏலத்தில் அதிக குத்தகை தருபவர்களுக்கு விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 

Related Stories:

>