×

தவணை காலம் முடிந்தும் நீர் திறக்க ஆந்திரா முடிவு சென்னைக்கு மேலும் 2 டிஎம்சி நீர் : நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

சென்னை: முதல் தவணை காலம் முடிந்த நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் கோடையிலும் முற்றிலும் வறண்டதால் சென்னை மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் தென் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீர் இந்த ஏரிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மழையால் இந்த ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பில்லை. இருந்தபோதிலும், கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்து வருகிறது.
 முதல் தவணை காலமான ஜூன் முதல் அக்டோபர் வரை, ஒப்பந்தப்படி ஆந்திர அரசு 8 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால், கண்டலேறு அணையில் உள்ள நீர் இருப்பை காரணம் காட்டி ஆந்திரா முறையாக தண்ணீர் வழங்குவதில்லை. இருப்பினும், இந்த ஆண்டு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறக்கப்பட்டு 567 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த அக்டோபர் 31ம்தேதியுடன் தவணை காலம் முடிவடைகிறது. ஒரு மாதமாக திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் பூண்டி ஏரிக்கு இதுவரை 2 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது தவணை காலம் முடிவடைந்து விட்டதால் ஆந்திர அரசு தண்ணீர் திறப்பை நிறுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தமிழக அதிகாரிகள் 5 டிஎம்சி தண்ணீராவது திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், சோமசீலா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது பெண்ணா நதி மூலம் கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 36டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

எனவே, ஆந்திர அரசும் சென்னைக்கு கூடுதலாக 2 டிஎம்சி தண்ணீரை திறக்க முடிவு செய்துள்ளது. தவணை காலம் முடிந்தும் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, பூண்டி ஏரியின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 1682 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரியில் 410 மில்லியன் கனஅடி, புழல் ஏரியில் 838 மில்லியன் கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 75 மில்லியன் கனஅடி என மொத்தமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 2789 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அதாவது 2.78 டிஎம்சியாக நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி