×

சென்னை விமான நிலையத்தில் 1 கோடி தங்கம், கரன்சி பறிமுதல் : 8 பேர் பிடிபட்டனர்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில்  அடுத்தடுத்து நடந்த சோதனையில் 94 லட்சம் மதிப்புடைய 2.4 கிலோ தங்கம், 7 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 8 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  வெளி நாடுகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, நள்ளிரவு 12.40 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த மதுரையை சேர்ந்த முகமது அலி (32), சிவகங்கையை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (32) ஆகிய  2 பேரையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவர்களது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வந்த லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த சையது முகமது (34), சையது பாரூக் (43) ஆகிய 2 பேரை பிடித்து, அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தபோது, அவர்களது உள்ளாடைக்குள் இருந்த தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். அதேபோல், நேற்று அதிகாலை 2.45 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த எமரேட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த சையது அப்தகீர் (44), சென்னையை சேர்ந்த அன்சாரி (34) ஆகிய 2 பேரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர்களது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர்.
இவர்கள் 6 பேரும் தனித்தனி விமானத்தில் வந்தாலும், ஒரே கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 6 பேரிடம் இருந்து ஒரு கிலோ 870 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதன் மதிப்பு 75.7 லட்சம்.  இவர்கள் 6 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு டைகர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது அலி (28) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டபோது, அவரது உள்ளாடையில் 670 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு 18.5 லட்சம். இதையடுத்து அவரையும் கைது செய்தனர். இதனிடையே, நேற்று காலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து டைகர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தமீம்அன்சாரி (40) என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா  பயணியாக செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது, அவரது உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைத்திருந்தார்.  அதன் இந்திய மதிப்பு 7 லட்சம். அதை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai airport ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்