×

குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்தால் சிறை

நாமக்கல், நவ.1:குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருப்பவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குழந்தை திருமணத் தடைச்சட்டம் 2006ன்படி, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். இதை மீறுவோர் மீது, குழந்தை திருமண தடைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருப்போருக்கும், திருமணத்தை நடத்தி வைப்போருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை, 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். திருமணம் என்ற பெயரில் 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையுடன் உடலுறவு கொண்டால், கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும்.

மேலும், 18 வயது நிறைவடையாத பெண் குழந்தை கருவுறுவும் போது, அப்பெண் குழந்தையின் கர்ப்பப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாமல் இருக்கும். இதனால் கருச்சிதைவு, உடல் ஊனமுற்ற குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாகவே வாய்ப்புகள் அதிகம். மேலும், பிரசவிக்கும் பெண் குழந்தைக்கும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றாலோ, நடைபெறப் போவதாக அறிந்தாலோ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 04286-233103, 1098,சைல்டு லைன் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பேராவூரணியை குழந்தை திருமணம் இல்லாத ஒன்றியமாக உருவாக்க வேண்டும்