×

ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இடிக்கப்பட்ட கடைகளை கட்டாமல் அலைக்கழிப்பு

ராசிபுரம், நவ.1: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நகராட்சி சார்பில் இடிக்கப்பட்ட கடைகளுக்கு பதில் புதிய கடைகளை கட்டி தராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வியாபாரிகள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகம் உள்ளன. இந்நிலையில், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, ஆயில்பட்டி ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இருந்த 40க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட தகுதியற்றது என நகராட்சி அறிவித்து, அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது, 3 மாதத்தில் கடைகள் கட்டி தரப்படும் என அப்போதைய ஆணையாளர் கூறியதால், கடைகாரர்கள் சம்மதம் தெரிவித்து கடையை காலி செய்தனர். இதை தொடர்ந்து 40 கடைகள் இடிக்கப்பட்டன.

கடைகள் இடிக்கப்பட்டு 10 மாதங்களை கடந்த நிலையில், புதிய கடைகள் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கடை வைத்திருந்தவர்கள் வருமானம் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சர் ஒருவரின் தலையீடு உள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் இடித்து விட்டு, வணிக வளாகம் கட்ட வேண்டும் எனவும், அதற்காக கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் வாய்வழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் உள்ள ராசிபுரம் நகராட்சி நிர்வாகம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், புதிய வணிக வளாக கட்டிடம் கட்டுவதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. அதை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags : bus stand ,
× RELATED விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீர்