×

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

வேப்பனஹள்ளி, நவ.1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள்  வேளாண் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்பகுதிளில் கடந்த 17ம் தேதி முதல், ஒருநாள் விட்டு ஒருநாள் என நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில், லட்சத்தீவு அருகே தோன்றியுள்ள மகா புயல் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 25 மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதியில், நேற்று காலை 2வது நாளாக  தூறல் மழை பெய்தது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. ஆனாலும், மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை மழையில் நனையாதவாறு பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச்சென்று வாகனங்களில் ஏற்றி விட்டு திரும்பினர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல், கிருஷ்ணகிரி நகரில் நேற்று மதியம் முதல் மழை பெய்யத் தொடங்கியது. தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது. காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. மழையால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், மேட்டு நிலங்களில் மானாவாரி சாகுபடி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் நேற்று பகல் சுமார் 12 மணி முதல் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக சாலையோர வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள், மழையில் நனைந்தபடியே சென்றனர்.

Tags : district ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்