×

சேலம் மாவட்ட ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சேலம், நவ.1:  சேலம் மாவட்ட ஊர்க்காவல் படை குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தின் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊர்க்காவல் படையில், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய சப்-டிவிசன்களில் 330 ஊர் காவல்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 55 பேர் பெண்கள். கோயில் திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை சீர்படுத்துவது போன்ற பணிகளில் ஊர் காவல் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊர்காவல் படையின் ஏரியா கமாண்டர் பெரியசாமி மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி தமிழக ஆளுநர், முதல்வர், தலைமைச்செயலாளர், டிஜிபி, கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு நெருங்கிய உறவினர். ஏரியா கமாண்டர் பதவி வாங்குவற்காக தேர்தல் நிதியாக தமிழக முதல்வரிடம் ₹50 லட்சமும், தமிழக காவல்துறைத்தலைவர் ராஜேந்திரனுக்கு ₹10 லட்சமும் கொடுத்தேன். சேலம் கலெக்டராக இருந்த ரோகிணி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர், திமுக எம்பி வெற்றிக்கு காரணம் என்பதால் அவர்களை முதல்வர் மூலமாக மாற்றினேன். சேலம் சரக டிஐஜியாக இருந்த செந்தில்குமாருக்கு ஐஜியாக பதவி உயர்வு பெற்றுக்கொடுத்தேன் என கூறும் அவர், ஊர்காவல் படை நிர்வாக செலவுக்கு படைவீரர்கள் மாதம்தோறும் ₹500 தரவேண்டும் என்கிறார். இவரது தவறுக்கு பல ஆண்டுகளாக அங்கேயே இருக்கும் ரைட்டர்தான் மூளையாக இருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியசாமி ஏரியா கமாண்டர் பதவியை வைத்து கொண்டு, அரசியல் தலைவர்களையும், போலீஸ் அதிகாரிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார். இவரை பதவியில் இருந்து நீக்காவிட்டால், சேலம் மாவட்ட ஊர்காவல் படை வீரர்கள் 330 பேரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏரியா கமாண்டர் பெரியசாமியிடம் கேட்டபோது, ‘தமிழக அளவில் ஊர் காவல் படையை, சேலத்தில் நான் சிறப்பாக வைத்துள்ளேன். சேவை மட்டுமே எனது குறிக்கோள். நல்லதை மட்டுமே செய்வதற்காக வந்துள்ளேன். யாரிடமும் டீ கூட வாங்கி குடிக்கமாட்டேன். எனது பதவியை பிடிக்க வேண்டும், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இதுபோன்ற மொட்டை கடிதத்தை எனக்கு வேண்டாதவர்கள் அனுப்பியுள்ளனர். பொய்யான புகாரை கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க இருக்கிறேன். அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை,’ என்றார்.

Tags : Salem District Guards Area ,Commander ,
× RELATED சீனாவுடன் பேச்சுவார்த்தை...