×

பயிர் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

தர்மபுரி, நவ.1: நடப்பாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமங்களில், நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் நெல் பயிருக்கு, 458 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக, பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள், மாவட்டத்தில் இந்த திட்டத்தை பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் நெல் பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 30.11.2019ம் தேதியாகும். எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்க, காப்பீட்டுத் திட்ட பிரிமியம் தொகையை செலுத்தி தங்களது பயிரினை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் பிரிமியம் செலுத்தினால் போதுமானது. அதாவது, நெல் பயிருக்கு 472.50 காப்பீட்டு பிரிமியமாக செலுத்தினால் போதுமானது. மீதம் பிரிமியம் தொகை 6437.50யை அரசே விவசாயிகளுக்காக செலுத்துகிறது. விவசாயிகள் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். கடந்த  2018-2019ம் ஆண்டு நெல் சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த, 4081 விவசாயிகளுக்கு 3.61 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Invite farmers ,
× RELATED பயிர்காப்பீட்டு திட்டம் குறித்து கலைக்குழுவினர் விழிப்புணர்வு