×

மாநகரில் 7 இடங்களில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி, நவ.1: திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை நான்கு கோட்டத்திலும் இலவச பொது மருத்துவ முகாம் 7 இடங்களில் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் நாளை (2ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி ரங்கம் கோட்டம் 6வது வார்டில் கீழகொண்டயம்பேட்டை மாநகராட்சி பாரதியார் ஆரம்பப்பள்ளி, வார்டு எண்.16ல் பீரங்கிகுளத்தில் உள்ள கீர்த்தனா கல்யாண மண்டபம், அரியமங்கலம் கோட்டம் 21 வது வார்டில் வரகனேரி பகுதியில் உள்ள ராமசாமி தேவர் மருந்தகம், வார்டு எண்.28ல் அரியமங்கலம் காமராஜ்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி, பொன்மலை கோட்டம் 36வது வார்டில் கொட்டப்பட்டு சத்துணவு மையம் காமன்மேடை, கோ.அபிசேகபுரம் கோட்டம் 56வது வார்டில் தில்லைநகர் வடவூரில் உள்ள சத்துணவு மையம், 40வது வார்டு எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி ஆகிய இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடக்கிறது.

இதில் குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இசிஜி., பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொரு பிரிவிலும் துறை வல்லுநர்களை கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Tags : camp ,locations ,city ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...