×

தர்மபுரியில் 7வது நாளாக டாக்டர்கள் போராட்டம்

தர்மபுரி, நவ.1: அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 7வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் 2 டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த 25ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, அரசு டாக்டர்கள் அறிவித்திருந்தனர். இதற்கிடையே நோயாளின் நலன் கருதி, அரசு டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாதவர்கள் இடம் காலி பணியிடமாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று, 7வது நாளாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் டாக்டர்களின் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக, மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், காரிமங்கலம் வட்டார மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை டாக்டருமான ரங்கசாமி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெங்கடேசன், பரமக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல், தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் லட்சுமி நரசிம்மனுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு 17 பி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தர்மபுரியில் பணிபுரியும் 15 அரசு டாக்டர்கள் சென்னையில் நடக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர். அதேசமயம், ஒரு சில டாக்டர்கள் பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து வருவதாக, அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Doctors ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...