×

புதிதாக பழக்கடை அமைக்க எதிர்ப்பு இரு தரப்பினர் மோதல்; சாலை மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.1: பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதிதாக பழக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.மல்லாபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 50க்கும் மேற்பட்டோர் சாலையோர கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அதேபகுதியை சேர்ந்த சண்மும் என்பவர் அங்கு பழக்கடை வைத்துள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்துள்ளது. இதனை பார்த்த அங்கு 20 வருடத்திற்கும் மேலாக கடை வைத்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி தரப்பினர், சண்முகத்தின் கடைக்கு வந்து அவரிடம் இங்கு ஏன் கடை வைத்தாய்? என கேட்டு தகராறு செய்துள்ளனர். இதற்கு நான் கடை வைத்தால் என்ன என சண்முகம் கேட்க, உன் கடையால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கும் என கூறி அவர்கள் சண்முகத்திடம் தகராறு செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், சண்முகத்திடம் தகராறில் ஈடுபடுவதை பார்த்த ஒரு தரப்பினர், அவருக்கு ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்த மற்றொரு தரப்பினர், சண்முகம் தரப்பினருடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு அடிதடியில் இறங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் திரண்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து, பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க, பொம்மிடி போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : conflict ,Road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...