×

திருவில்லிபுத்தூர் தாலுகாவில் அரசு, தனியாருக்கு சொந்தமான 1171 ஆழ்துளை கிணறுகள் மூடல்

திருவில்லிபுத்தூர், நவ. 1: திருவில்லிபுத்தூர் தாலுகாவில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் திறந்த நிலையில் இருந்த 1171 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது.மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுர்ஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பயன்பாடின்றி உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. திருவில்லிபுத்தூர் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் எங்கெங்கு உள்ளன என வருவாய் துறையினர், நகராட்சி அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் திருவில்லிபுத்தூர் தாலுகாவில் பயன்பாடின்றி இருந்த 1171 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தனியார் நிலங்கள், தோட்ட பகுதிகளில் இருந்த 525 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. அதேபோல் அரசுக்குச் சொந்தமான இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் 646 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மேலும் ஏதாவது ஆழ்துளை கிணறுகள் திறந்து உள்ளதா என ஆய்வு நடத்தி வருகிறோம். ஆழ்துளை கிணறுகள் எங்காவது திறந்திருந்தால் உடனடியாக தகவல் தர வேண்டும்’ என தெரிவித்தார்.

Tags : Government ,wells ,Tiruviliputhur Taluk ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...