×

அருப்புக்கோட்டை அருகே செங்குளத்தில் ஓடையில் பாலம் அமைக்க வலியுறுத்தி கிராமத்தினர் தாலுகா அலுவலகம் முற்றுகை

அருப்புக்கோட்டை. நவ.1: அருப்புக்கோட்டை அருகே செங்குளம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாய்க்கு  உபரி நீர் வரும் ஓடை கிராமத்தின் மைய பகுதியில் செல்கிறது.  இந்த நீரோடை வழியாக தான் நான்குபுறமும் உள்ள அனைத்து குடியிருப்புகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் பகுதியாக உள்ளது.  ஓடையை பராமரிப்பு செய்யாமல் விட்டதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஓடை சுருங்கி விட்டதாலும், மழை காலத்தில் ஓடை பெருகி பொதுமக்கள் நடக்கமுடியாத அளவிற்கு இழுத்துச் செல்லும் வேகத்தில் மழை வெள்ளம் செல்கிறது.  ஓடையை கடந்து தான் மேலத்தெரு மக்கள் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  ஓடையை கடந்து தான் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லவேண்டும்.  மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு செல்லமுடியாமல் மாணவ, மாணவிகள் உள்ளனர்.  

இதனால் ஆத்திரமடைந்த செங்குளம் கிராம மக்கள் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்து ஓடையில் பாலம் கட்டித்தரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஓடையில் சீராக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முற்றுகையிட்டு தாசில்தார் பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து  செங்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த கந்தசாமி கூறியதாவது, ஓடையில் பாலம் அமைக்கக்கோரி பலமுறை மனு கொடுத்துள்ளோம்.  கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை உள்ளது.  தற்போது மழை காலமாக இருப்பதால் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் நாங்கள் வெளியில் செல்ல முடியவில்லை.  மங்கம்மா சாலை பகுதி முழுவதும் பாதை சுவடுகளே இல்லாமல் பயன்பாடற்ற நிலையில் உள்ளது.  மேலும் கழிவுநீர் செல்ல முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாத நிலையில்  அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று விடுகிறது.  இந்த ஓடை வழியாக தான் மயானத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.  கிராம அனைத்து பொதுமக்களுக்கும் பாதை என்பதே இல்லாத நிலையில்  ஓடையின் மையப்பகுதியின் வழியாக தான் சென்று வரவேண்டிய நிலை உள்ளது.  எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மங்கம்மா சாலை இணைப்பு ஏற்படுத்தி அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்,

இதுகுறித்து பிரேமா கூறியதாவது, ‘ஓடையை கடந்து தான் பள்ளி குழந்தைகள் செல்ல வேண்டும்.  மழை காலங்களில் கழுத்து வரை தண்ணீர் செல்கிறது.  இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.  அம்மா திட்டம் மூலமும் மனு கொடுத்துள்ளோம்.  ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.  மேலும் தற்போது தெருக்களில் வரும் கழிவுநீரும் இந்த ஓடை வழியாக தான் செல்கிறது.  இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகம் உள்ளது.  எனவே 30 வருடங்களாக இந்த ஓடையில் பாலம் கட்டும் பிரச்சனை உள்ளது.  ஓடையில் பாலம் கட்டினால் எந்தவித பிரச்சனையும் இருக்காது. மழை பெய்யும் ஒவ்வொரு வருடமும் இதே நிலை தான் உள்ளது.  அதிகாரிகளும் எங்களிடம் மனு வாங்குவதுடன் சரி.  எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றார்.

Tags : bridge ,Aruppukkottai ,stream ,Sengulam ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...